என் அப்பாவை நான் கடைசிவரை புரிந்து கொள்ளவில்லை.( Real tamil stories)
என் பெயர் ராஜ்குமார் நான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். நான் படித்து முடித்துவிட்டு தற்போது ஒரு நல்ல தனியார் துறையில் வேலை செய்து வருகிறேன். நான் சிறுவனாக இருக்கும் போது என் அப்பாவை பார்த்தால் எனக்கு சற்று பயமாக இருக்கும். நான் சற்று பெரியவனாக வளர ஆரம்பிக்கும் பொழுது என் அப்பாவை கண்டு பயம் சற்று குறைய தொடங்கியது. என் அப்பா மது அருந்துவதால் எனக்கு அவரை பிடிக்காமல் சென்று விட்டது. எனக்கு நல்ல விவரம் தெரிந்த வயது முதலே அவர் மதுவை அருந்துவதால் ஏனோ எனக்கு அவரை பிடிக்காமலே சென்றுவிட்டது. எனது 12வது படிப்பை முடித்த பிறகு கல்லூரியில் சேர்ந்த தருணம் அது. அப்போது அவர் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்ததால் எனக்கும் அவருக்கும் ஒரு சிறிய வாய் தகராறு ஏற்பட்டது.
என் தந்தை மது அருந்தி விட்டு வருவதாலே என் தந்தைக்கும் தாய்க்கும் இடையே சண்டைகள் வரும். எனக்கு கூடப்பிறந்த அண்ணன் ஒருவன் இருக்கிறான். அப்பாவிற்கு அம்மாவுக்கும் சண்டை வரும்போது எல்லாம் எனது அண்ணன் கண்டு கொள்ளாமல் எங்காவது வெளியே சென்று விடுவான் நான் மட்டும் தான் வீட்டில் இருப்பேன். அப்போது என் தந்தையின் மீது எனக்கு மிகவும் பயங்கர கோபம் வரும். இவர் குடித்து விட்டு வருவதால் தான் இவ்வளவு சண்டைகள் நடக்கிறது. அதனாலே அவருக்கு எனக்கும் சிறிய தகராறு அடிக்கடி ஏற்படும்.
இப்படி ஒரு சில காலங்கள் போய்க் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் நான் அவரை கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்ய ஆரம்பித்தேன். நான் என் தந்தையை ஏதாவது கோபமாக பேசினால் அவர் அமைதியாகி விடுவார். அவர் குடித்து விட்டு வந்தால் மட்டுமே அவரிடம் கோபமாக பேசுவேன் மற்றபடி எல்லாம் அவரிடம் இருப்பது போல வழக்கமாகத்தான் பேசிக் கொண்டிருப்பேன். எனது பாட்டி இறந்த போதும் கூட என் தந்தையிடம் நான் அன்று இரவு கோபமாகத்தான் பேசினேன். ஏன்னெறால் அவர் குடித்து விட்டு வந்து விட்டு தேவையில்லாதவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.
என் தாயின் உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு என் தந்தை அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் அப்போதும் குடித்துவிட்டு வந்திருந்தால் நான் அவரிடம் கடுமையாக விமர்சித்தேன். அம்மாவை நான் பார்த்துக் கொள்வதை விட நீங்கள் தான் அதிகமாக அக்கறை எடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் இந்த மாதிரி இருக்கிறீர்கள் என்று அவரிடம் சண்டையிட்டு இரண்டு மூன்று தினங்கள் பேசாமல் கூட இருந்திருக்கிறேன். அன்று அதேபோல ஒரு நாள் என் தந்தைக்கும் தாய்க்கும் இடையே சிறிய சண்டை ஏற்பட்டது. அந்தச் சண்டையில் என் தாயை என் தந்தைக்காக தாக்க வந்தார் நான் என்னை அறியாமலே அவரை அடிப்பதற்கு என் கைகள் ஓங்கியது. அந்த சமயத்தில் என் தாய் என்னை தடுத்து விட்டார்கள்.
ஆனால் இது தவறு என்று எனக்கு புரிந்தது. ஆனாலும் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுநாள் காலைப் பொழுதில் நான் வேலையாக வெளியே சென்று விட்டேன் அப்பொழுது என் தந்தையும் தாயும் பேசிக் கொண்டனர். அப்போது என் தந்தை அவன் மட்டும் நேற்று இரவு என் மீது கை வைத்திருந்தால் நான் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன். உயிரை மாய்த்துக் கொண்டிருப்பேன் என்று என் தாயிடம் கூறியதாக என் தாய் எனும் என்னிடம் கூறினார். என் தாய் நாங்கள் இருவரும் சண்டை என்றாலும் கூட கடைசியில் பேசிக் கொள்வோம் நீ அதை பெரிதாக எண்ண வேண்டாம் என்று என்னிடம் கூறினார்கள். நான் என் தாயிடம் நான் இருக்கும் போது நீங்கள் சண்டையிட்டு கொள்ள வேண்டாம் நான் இல்லாத போது நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நான் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன்.
அதன் பிறகு என் தந்தை மது அருந்திவிட்டு வந்து கொண்டு தான் இருந்தார். ஒரு கட்டத்தில் என் தந்தை மது அருந்தி விட்டு வந்தாலும் கூட நான் எனது குரலை உயர்த்தி பேசினேன் என்றால் எனது தந்தை அமைதியாகிவிடுவார் அது எனக்கு சாதகமாகவே இருந்தது. அவர் எப்போது எல்லாம் குடித்து விட்டு வருகிறாரோ அப்போதெல்லாம் நான் அவரிடம் கோபமாகத்தான் நான் பேசுவேன். ஏன்னெறால் அவர் மது அருந்திவிட்டு வந்தால் எனக்கு சுத்தமாக பிடிக்காது. ஒரு வருடத்திற்கு முன்பாக எனது அண்ணனின் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அப்போது நான் என் தந்தையிடம் மது அருந்த வேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அவரிடம் தெளிவாக கூறியிருந்தேன்.
என் அண்ணனின் திருமணத்தின் போது என் தந்தை கொஞ்சம் கூட மது அருந்தவில்லை என் அண்ணனின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. என் தந்தையின் உடல் சோர்வை கண்டு நானே அவருக்கு வாருங்கள் கடைக்கு சென்று வரலாம் என்று கூட்டிக்கொண்டு சென்று வருவேன். என் அண்ணனின் திருமணம் முடிந்த பிறகு ஒரு மாதம் கழித்து என் அண்ணி சமைத்த உணவு சரியில்லை என்று என் தந்தை மது அருந்துவிட்டு கூறியிருந்தார். அப்போது எனக்கும் என் தந்தைக்கும் சிறிய சண்டை ஏற்பட்டு இரண்டு தினங்கள் பேசிக்கொள்ளவே இல்லை.. அவர் வழக்கம் போல நான் சொல்வதையும் கேளாமல் மது அருந்து விட்டு வந்து கொண்டிருந்தார்.
திடிரென்று ஒரு நாள், அன்று ஒரு நாள் மதிய வேளையில் நான் வேலையில் இருக்கும் பொழுது என் தந்தையுடன் வேலை செய்யும் ஒருவர் உனது தந்தை வெயிலில் மயக்கம் அடைந்து விட்டார் என்று எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினார். எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நான் என் அண்ணனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்கு சென்று பார்க்கும் படி கூறினேன். என் அண்ணன் அங்கு சென்று பார்க்கும்போது என் தந்தை மயக்க நிலையில் இருந்ததை கண்டு அவரை விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் சென்று பார்க்கும் பொழுது என் தந்தை உயிருடன் இல்லை என்று மருத்துவர்கள் கூறினார்..
என் அண்ணன் என்னை தொலைபேசியில் நமது தந்தை நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்று சொன்னபோது என் கண்களில் இருந்து வந்த கண்ணீர் எந்த அளவுக்கு என்று எனக்கே தெரியவில்லை.. அவரை வீட்டிற்கு கொண்டு வந்து பார்த்த பொழுதுதான் தெரிந்தது அவருக்கு மின்னல் தாக்கியிருப்பது.. மின்னல் தாக்கி உயிர் இழந்து விட்டார் என்பது தெரிய வந்தது. என் தந்தை இறப்பதற்கு முந்தினம் கூட அவர் குடித்துவிட்டு தான் வந்திருந்தார் அதனால் அவருடன் கடுமையாக பேசினேன் ஆனால் மறுநாள் இவ்வாறு நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் தந்தை இழந்த சோகத்தில் எனது குடும்பம் மூழ்கியது..
என் தந்தை இறந்து ஒரு சில தினங்களுக்குப் பிறகு அவர் இல்லாத இடத்தை யார் நிரப்புவது என்று எனக்குள் ஒரு குற்ற உணர்வு.. நான் அவரிடம் அன்பாக பேசி இருக்கலாம் என்று எனக்கு தோன்ற ஆரம்பித்தது.. அவர் மது அருந்தும் காரணத்தினாலே எனக்கு பிடிக்காமல் சென்று விட்டது. என் தந்தைக்கு எந்த ஒரு உடல் உபாதைகளும் கிடையாது. கடுமையான உழைப்பாளி அவர் உடல் சோர்வுக்காக தான் மது அருந்துகிறார் என்று புரிந்தது.. ஆனால் மது அருந்தினாலும் கூட நான் ஏதாவது கோபமாக பேசினால் அமைதியாகி விடுவார்.. நான் இனிமேல் யாரை அப்பா என்று கூப்பிடுவேன்.. நான் கடைசி வரை அவரை புரிந்து கொள்ளவே இல்லை.. இப்போது அவர் என்னுடன் இல்லை என்பது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
அவர் இப்போது இருந்திருந்தால் அவரை நான் இவ்வாறு எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அவ்வாறு நான் கண்டிப்பாக பார்த்துக் கொள்வேன். அவரிடம் நண்பனாக பழகி இருப்பேன். ஆனால் இப்போது அவர் என்னுடன் இல்லை அவருடைய நினைவுகள் மட்டுமே என்னை சுற்றிக் கொண்டிருக்கிறது. அவரைப் பற்றி தினமும் ஏதாவது ஒரு நினைவு என்னிடம் வந்து செல்லும். நம் உடன் இருக்கும் உறவுகளை அவர்கள் இருக்கும் போது நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாத போது அவர்கள் இல்லை என்று வருந்து வதை விட அவர்கள் இருக்கும் பொழுதே அவர்களை நன்றாக கவனித்துக் கொள்வது மேல்.. நான் செய்த தவறை நீங்கள் யாரும் செய்ய வேண்டாம் தந்தை இருக்கும் பொழுதே அவர்கள் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் இல்லாத போது தான் அவர்களுடைய அருமை உங்களுக்கு புரியும்..
இந்தப் பதிவு ராஜ்குமார் எனும் நபர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததை நம்மிடம் பகிர்ந்து உள்ளார் இதே போல உங்கள் வாழ்க்கையில் நடந்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள mail IDக்கு உங்கள் வாழ்க்கையில் நடந்த இனிப்பான, கசப்பான தருணங்கள் எதுவாக இருந்தாலும் என்னுடன் ஷேர் செய்யுங்கள்.
Email - saranlovelytalks@gmail.com
இதைப் போல வாழ்க்கையில் நடந்த பல உண்மை கதைகளை கேட்க வேண்டும் என்று நினைத்தால் நமது telagram சேனலில் join செய்து கொள்ளவும்..
0 Comments
thanks for your comments