எனது பெயர் நந்தகுமார் நான் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். நான் பிளம்பிங் வேலை செய்து வருகிறேன். என்னுடைய மது பழக்கத்தால் என் வாழ்க்கையில் நான் என்னவெல்லாம் பார்க்க கூடாது என்று நினைத்தேனோ? அவற்றையெல்லாம் எல்லாம் பார்க்க நேர்ந்தது. அதனால் என் குடும்பம் என்னை விட்டு பிரிந்தது. (Tamil stories)
நான் எனது பள்ளி படிப்பை பத்தாம் வகுப்பில் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். பத்தாம் வகுப்பில் இருந்தே ஒரு சில சிறிய வேலைகள் செய்து அதை என்னுடைய செலவுகளுக்காக நான் வைத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் நான் வேலைக்கு செல்லும் இடத்தில் ஒரு சில நண்பர்கள் எனக்கு பழக்கம் ஆனார்கள். அவர்களுடன் சேர்ந்து நான் முதல்முறையாக மதுவை அருந்தினேன். அப்போது எனக்கு தெரியாது என் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறும் என்று. நான் மதுவை முதல் முதலில் குடித்த போது எனக்கு தலை சுற்றல் மாதிரி ஏற்பட்டு நான் மயங்கி விழுந்தேன். மறுநாள் என் நண்பர்களிடம் கேட்டபோது அது அப்படித்தான் இருக்கும், ஆனால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் கூறினார்கள். இரண்டாம் முறை நான் மது அருந்தும் போது எனக்கு வாந்தி ஏற்பட்டது அதற்கு என் நண்பர்கள் என்னிடம் மீண்டும் அதனை குடித்தால் மட்டுமே சரியாகும் என்று என்னிடம் கூறினார்கள். இப்படி என் நண்பர்கள் என்னிடம் கூறவே நான் மெதுவாக மது பழக்கத்திற்கு அடிமையாக ஆரம்பித்தேன். (Tamil stories)
ஒரு கட்டத்தில் நான் காலையில் வேலைக்கு செல்லும்போது மதுவை அருந்தி விட்டு தான் நான் வேலைக்குச் செல்வேன். அப்போது என்னுடைய முதலாளி என்னை திட்டி, என்னை வீட்டுக்கு அனுப்பி விடுவார். நான் வேலைக்குச் சென்று சம்பாதித்த பணத்தை எல்லாம் நான் மது அருந்துவதற்கு மட்டுமே பயன்படுத்தினேன். ஒரு கட்டத்தில் மது இல்லாமல் என்னால் வாழவே முடியாது என்ற நிலைமைக்கு நான் தள்ளப்பட்டேன். எனது ஊரில் என்னை கண்டால் அனைவரும் ஏன் இவன் இவ்வாறு குடித்துவிட்டு வருகிறான் என்று ஏளனமாக பேசுவார்கள். ஆனால் என்னுடைய தாய் மட்டுமே எனக்காக நின்று என்னுடன் போராடிக் கொண்டிருந்தார். (Tamil stories)
ஒரு கட்டத்தில் எனது தந்தைக்கும் தாய்க்கும் நான் மிகவும் தொந்தரவாக இருந்தேன். அவர்களை நான் பேசாத வார்த்தை இல்லை இருந்தாலும் கூட என் அன்னை கண்ணீர் சிந்தி கொண்டு இதெல்லாம் செய்யாதே என்று என்னிடம் மன்றாடி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போதும் நான் அதைக் கேட்கவில்லை. எனது மதுப்பழக்கம் நிற்காமல் தலை தூக்கவே நான் தினமும் மது அருந்தி விட்டு மற்றவர்களுடன் சண்டை போட ஆரம்பித்தேன். என்னைப் பொறுத்த வரையில் ஊரில் ஒரு சிலர் பெரிய மனிதர்கள் இருப்பார்கள் அவர்களிடம் மட்டுமே நான் மது அருந்தி விட்டால் அவர்கள் பேசமாட்டேன் மது அருந்தாத போது அமைதியாக, பொறுமையாக பேசுவேன் அந்த குணம் என்னிடம் இருந்தது.(Tamil stories)
ஒரு கட்டத்தில் நான் மது அருந்திவிட்டு மற்றவர்களிடம் சண்டை இடுவது மிகவும் அதிகமானது. அதனால் நான் வசிக்கும் ஊரில் அனைவரும் என்னை எதிரியாக பார்க்க ஆரம்பித்தார்கள். ஒரு திருவிழா நடந்த போதிலும் கூட இவன் வந்தால் ஏதாவது ஒரு பிரச்சனை வரும் என்ற காரணத்தினாலே என்னை அங்கு அழைக்க மாட்டார்கள். இருந்தபோதிலும் நான் அங்கு கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வருவேன். ஊரில் அனைவரும் என்னை விரோதியாக பார்க்கவே எனக்கு அவர்களின் மேல் கோபம் வர ஆரம்பித்தது. இந்த காரணத்தினால் ஊரில் அடிக்கடி ஏதாவது பிரச்சனை செய்து கொண்டே தான் இருப்பேன். என் தாய் என்னை பற்றி நினைத்து மிகவும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.(Tamil stories)
நான் இவ்வாறு செய்வதெல்லாம் பார்த்து என்னுடைய தந்தை என்னிடம் மிகவும் கோபமாக பேசினார். நான் மது அருந்திவிட்டு போதையில் இருந்த காரணத்தினால் என் தந்தையை அடிக்க நான் முற்பட்டேன். அப்போது அனைவரும் என்னை தடுத்து என்னை ஒரு இடத்தில் உட்கார வைத்தார்கள். மீண்டும் அதே போல எனது ஊரில் நான் சண்டையிடவே எனது நண்பர்களுடன் சேர்ந்து ஊரில் உள்ள ஒரு சில நபர்களை நான் தாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். மது பழக்கம் என் தலைக்கு ஏறியது. மது இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்ற நிலைமையில் இருந்தேன்.(Tamil stories)
இந்த சமயத்தில் எனது தாய் எனக்கு திருமணம் செய்து வைத்தால் நான் மாறுவேன் என்று நினைத்து எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். ஒருபுறம் என் தாய் எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்க மறுபுறம் நான் ஊரில் சண்டை இட்டு ஊர் மக்கள் அனைவரும் என்னை ஒதுக்கி வைக்கும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். ஆனாலும் கூட என்னுடைய தாய் என்னுடன் நின்று எனக்காக போராடினார்கள். எனக்காக ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார், என் தாய் ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்கவே எனக்கு ஊர் மக்களின் மீது மிகவும் கோபம் ஏற்பட்டது. இந்த எல்லா தவறுகளையும் நான் மது அருந்திவிட்டு செய்தேன்.(Tamil stories)
ஒரு சில நாட்களிலேயே என்னை ஒரு பெண்ணுக்கு பிடித்தது. அந்தப் பெண்ணின் தொலைபேசி எண் எனக்கு கிடைக்கவே நான் அவளிடம் உரையாடினேன். எனக்கு மதுப்பழக்கம் இருக்கிறது. நான் தினமும் மது அருந்துவேன் என்னை திருமணம் செய்து கொண்டால் உன்னுடைய வாழ்க்கை தான் நரகத்தில் இருக்கும் என்று நான் கூறினேன். அப்போது அவள் என்னிடம் நான் உங்களை கண்டிப்பாக மாற்றுவேன் என்று என்னிடம் கூறினாள். அப்போது எனக்கு நம்பிக்கை இல்லை இருந்தபோதிலும் அவள் என்னை பிடித்திருக்கிறது. நான் திருமணம் செய்தால் உங்களை மட்டும் தான் திருமணம் செய்வேன் என்று உறுதியுடன் இருந்தாள். நாங்கள் இருவரும் தொலைபேசியில் ஒரு மாத காலம் பேசிக் கொண்டிருந்தோம்.(Tamil stories)
அவளுடைய வீட்டில் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று பயங்கர எதிர்ப்பு தெரிவித்தார்கள் ஆனால் அவள் அதையும் மீறி எனக்காக வீட்டை விட்டு வெளியே வந்தாள். அவள் வீட்டை விட்டு வெளியே வந்த மறுதினம் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் வீட்டில் நான் தெரிவித்த போது அவளை வீட்டுக்கு அழைத்து என்று எனது அம்மா என்னிடம் கூறினார். திருமணம் ஆன ஓரிரு நாட்களில் அவர்கள் வீட்டில் எங்களை சேர்த்துக் கொண்டார்கள். ஆனால் என்னால் மது அருந்துவதை விட முடியவில்லை. திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே எனது மனைவி கர்ப்பம் தரித்தால். அப்போது கூட என்னால் குடியை விட முடியவில்லை. (Tamil stories)
அப்போது ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு ஒரு திருமண அழைப்பிதழ் ஒன்று வந்தது. இந்த திருமணத்திற்கு அவசியம் வரும் படி எல்லாரும் கேட்டனர். நான் இதற்கு முன்பும் அனைத்து விசேஷங்களில் பங்கேற்று உள்ளேன். ஆனால் அப்போது எல்லாம் என் காதுப்படவே இவன் மது அருந்தி விட்டு என்னென்ன அட்டூழியம் செய்கிறான் என்று கூறுவார்கள். இந்த தடவை நானும் எனது மனைவியும் திருமண விழாவிற்கு சென்ற போது நான் மது அருந்தி இருந்தேன். அப்போது நான் செய்ய வேண்டிய சடங்கை வேறு ஒருவர் செய்தார். எனக்கு கோபம் வந்தது. நான் அவர்களிடம் சென்று கேட்டேன் நான் செய்ய வேண்டிய சடங்கை இவர்கள் எவ்வாறு செய்யலாம். (Tamil stories)
நான் கேட்ட கேள்விக்கு அவர்கள் பதில் தெரிவிக்காமல், நான் மது போதையில் இருந்ததால் அவர்கள் அலட்சியம் செய்தார்கள். நான் கோபத்தில் உள்ளதால் என்னுடைய அண்ணன் தம்பிகள் என்னை சமாதானப்படுத்தி ஒரு இடத்தில் உட்கார வைத்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி நீ இப்படி மது அருந்தி விட்டு இருந்ததால் தான் உனக்கும் உன் மனைவிக்கும் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்க வில்லை. அனைவரும் உன்னை அலட்சியப்படுத்துகிறார்கள் உன்னை வெறுத்து ஒதுக்குகின்றார்கள். இதுவே நீ மது அருந்தாமல் தெளிவாக இருந்திருந்தால் இந்த சடங்கை நீ தான் செய்திருப்பாய். நீ மது அருந்துவதால உன்னுடைய மனைவிக்கும் சேர்த்து மிகப்பெரிய அவமானம் உன் மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தைக்காக நீ மது அருந்தாமல் இருக்க வேண்டும் என்று கேட்டனர். (Tamil stories)
அப்போது நான் அவர்களிடம் கோபப்பட்டு அங்கிருந்து சென்றேன். ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து நான் சற்று சிந்தித்து பார்த்தேன் நான் மது அருந்துவதால் தான் இவர்கள் என்னை அலட்சியப்படுத்துகிறார்கள். எனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை எதுவும் கிடைப்பதில்லை. நான் இனிமேல் மது அருந்தக்கூடாது என்று அந்த சமயம் முடிவு செய்தேன். விழா நடந்து கொண்டிருந்த இடத்திற்கு மீண்டும் வந்தேன். அப்போது அவர்களிடம் நான் சவால் விடுத்தேன். நான் மது அருந்துவதால் தான் நீங்கள் என்னை அலட்சியமாக நடத்துகிறீர்கள். இனிமேல் என் வாழ்நாளில் நான் மது அருந்தவே மாட்டேன் இது என் மனைவியின் வயிற்றில் வளரும் என் மகள் மீது சத்தியம் என்று கூறிவிட்டு என் மனைவியை அழைத்துக்கொண்டு நான் வீட்டிற்கு வந்தேன். (Tamil stories)
இதுதான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சத்தியம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தேன் என் மனைவியின் மிகவும் சந்தோஷப்பட்டாள் ஓரிரு நாட்கள் மிகவும் போராடினேன். மது அருந்தாமல் இருப்பதற்கு என் கைகள் நடுங்கின. மது அருந்த வேண்டும் என்று என் மனம் ஏங்கியது ஆனால் நான் என் மகளுக்கு செய்து கொடுத்து சத்தியத்தை காப்பாற்றியாக வேண்டும் என்று என்னை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டேன். அரைகுறையாக தெரிந்த எனது பிளம்பிங் தொழிலை முழுமையாக கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்து அங்கு படிப்படியாக எனது பிளம்பிங் தொழிலை முழுமையாக கற்றுக் கொண்டேன். நான் குடியை நிறுத்தி விட்ட ஓரிரு மாதங்களிலேயே எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அவ்வளவு சந்தோஷத்தில் கூட எனக்கு மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் கூட வரவில்லை. (Tamil stories)
வீட்டிற்கு தேவையான எல்லாவற்றையும் நான் செய்தேன். என் மனைவி இரண்டாம் முறை கர்ப்பம் தரித்தால். மீண்டும் ஒரு ஆண் குழந்தையை எனக்கு பெற்று கொடுத்தாள். இப்போது நானும் என் குடும்பமும் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம். மதுப்பழக்கத்தை விட்டு ஐந்து வருடங்கள் ஆகின்றன. இதுவரைக்கும் எனக்கு மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லை. எந்த ஒரு விழாவிற்கு சென்றாலும் அங்கு நான் செய்ய வேண்டிய கடமையை சரியான முறையில் செய்து வருகிறேன். என்னை பற்றி ஏளனமாக பேசிய அனைவரும் என்னை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு என் குடும்பத்தை நல்லபடியாக வைத்து பார்த்துக் கொள்கிறேன். ஊரில் யார் யாருடன் சண்டையிட்டு வந்தேனோ? அவர்களிடம் சென்று நான் மன்னிப்பு கூறினேன் இன்று எனது ஊரில் நான் மிகவும் ஆனந்தமாக எனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன்.(Tamil stories)
நான் செய்த அனைத்து இன்னல்களையும் தாங்கி என்னுடன் என் மனைவியை இன்று வரை இருக்கிறாள். அன்று நடந்த அந்த ஒரு சம்பவம் தான் நான் குடியை நிறுத்துவதற்கு மிகவும் முக்கிய காரணம் என்று சொல்லலாம். என் குடும்பம் என் தாய் தந்தை அனைவரையும் இப்போது நல்ல முறையில் நான் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். குடிப்பழக்கம் நம்மை மட்டுமல்ல நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கிறது என்பதை நான் நன்றாக புரிந்து கொண்டேன். என்னுடைய வாழ்நாளில் இனிவரும் நாட்களில் நான் மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு துளியும் கூட வராது. (Tamil stories)
இதுவரைக்கும் நீங்க படித்துக் கொண்டு வந்தது வெறும் கதையல்ல நந்தகுமார் என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மையான நிகழ்வு இது. இதே போல உங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத தருணங்கள் எதுவாக இருந்தாலும் நம்முடன் பகிர்ந்து கொள்ளலாம் கீழே உள்ள மெயில் ஐடிக்கு உங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத தருணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளவும்.
Email - saranlovelytalks@gmail.com
இதைப் போல வாழ்க்கையில் நடந்த பல உண்மை கதைகளை கேட்க வேண்டும் என்று நினைத்தால் நமது telagram சேனலில் join செய்து கொள்ளவும்..
https://telegram.me/realtamilstories
1 Comments
Thanks for covering most of your experience in blog. Sure this will be very useful for those needed.
ReplyDeleteLatest News Updates
thanks for your comments